அவிநாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கத்தியை காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் கருமலைப்பாடி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 18ம் தேதி பைக்கில் சொந்த ஊருக்கு சென்றிருந்த பிரகாஷ் இரவு நேரத்தில் அவிநாசி திரும்பியுள்ளார். அப்போது அவிநாசி அருகே கோவை பைபாஸ் சாலை வழியாக வரும் போது அடையாளம் தெரியாத 3 பேர் அவரை வழிமறித்துள்ளனர். பின்னர், அவர் ஓட்டி வந்த பைக்கை தங்களுடையது எனக்கூறி, கத்தியை காண்பித்து மிரட்டி, அபகரித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து பிரகாஷ் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இருவர் போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்துள்ளனர். போலீசார், அவர்களை விரட்டிப் பிடித்து விசாரித்த போது, இருவரும் பிரகாஷின் பைக்கை வழிப்பறி செய்தவர்கள் என்பது தெரியவந்தது. பைக்குடன் தலைமறைவான மற்றொருவரை தீவிரமாக போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு வாகனத் தனிக்கையில் ஈடுபட்ட போலீசார் சந்தேகப்படும்படியாக பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் வழிப்பறி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி இவர்தான் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் வழிப்பறிக்கு பயன்படுத்திய கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.







