இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று ராய்ப்பூர் மைதனாத்தில் நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி கடந்த 18ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 349 ரன்களை குவித்தது. 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால், ஆட்டத்தின் தொடக்கம் முதலே இந்திய பவுலர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தது. 136 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை நியூசிலாந்து அணி இழந்து தடுமாறியது. இதையடுத்து ஜோடி சேர்ந்த மிட்செல் சான்ட்னர் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியில் 337 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நியூசிலாந்து போராடி தோல்வியை தழுவியது.இதனால் இந்திய அணி முதலாவது ஒருநாள் போட்டியில் த்ரில் வெற்றி பெற்றது. 2வது ஒருநாள் போட்டி இன்று ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை வென்று கோப்பையை கைப்பற்றும். எனவே இந்த போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கும்.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரையில் இந்த போட்டி மிக முக்கியமானதாகும். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை வெல்வதற்கு வாய்ப்பு ஏற்படும். தோல்வியை தழுவினால் இந்த தொடரை இழக்க நேரிடும். எனவே இன்று நடைபெறும் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது எனலாம்.