27 வயது ஜாக்கி சானை களமிறக்கிய படக்குழு… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

நடிகர் ஜாக்கி சானின் 70 வயது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து,  ‘ஜாக்கி சானுக்கு வயசாகிருச்சா…’ எனக் கண்ணீர் விட்ட தனது ரசிகர்களுக்காக 27 வயது ஜாக்கி சானை படக்குழு களமிறக்கியுள்ளது. உலக…

நடிகர் ஜாக்கி சானின் 70 வயது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து,  ‘ஜாக்கி சானுக்கு வயசாகிருச்சா…’ எனக் கண்ணீர் விட்ட தனது ரசிகர்களுக்காக 27 வயது ஜாக்கி சானை படக்குழு களமிறக்கியுள்ளது.

உலக சினிமாவில் ஒரு சிலர் மட்டுமே நமக்குப் பரிட்சயமானவர்களாக இருப்பார்கள். அந்த ஒரு சிலருள் முக்கியமானவர் ஜாக்கி சான்.  இவரின் சண்டைக் காட்சிகளைப் பார்த்து ரசித்து மகிழாதவர்கள் மிகவும் சொற்பம்.  அதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரும் விதிவிலக்கல்ல.  சண்டைக் காட்சிகள் மட்டுமல்லாமல் இவர் செய்யும் நகைச்சுவை சேட்டைகளுக்கு ரசிகர்கள் பலர் உலக அளவில் உள்ளனர் என்றே சொல்லலாம். 1962-ம் ஆண்டு தொடங்கி சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றளவும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஜாக்கி சான்.

ஹாலிவுட்டில் திறமையான பல நடிகர்களின் ஆதிக்கத்துக்கு நடுவே ஆசிய நாடான ஹாங்காங்கைச் சேர்ந்த ஒருவர் ஹாலிவுட்டில் கால் பதித்தவர்தான் ஜாக்கி சான். இவர் தற்காப்புக் கலைகளில் ஒன்றான குங்ஃபூவை தன் சிறு வயதிலேயே பழகியிருந்தார். ப்ரூஸ் லீ, ஜெட் லீ போன்ற ஜாம்பவான்களுக்கு மத்தியில் தனித்துத் தெரிய குங்ஃபூ என்ற கலையை வேறுவிதமாகப் பயன்படுத்தியவர் ஜாக்கி சான். முதலில் புரூஸ்லீ ஸ்டண்ட் கலைஞராக திரையில் அறிமுகமாகி, பிறகு ஹாலிவுட் உலகில் இவருடைய படங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

கோப்புக் காட்சி: ஜாக்கி சான்

இந்த 2024-ம் ஆண்டில் நான்குக்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 70 வயதை தொட்டுவிட்ட ஜாக்கிசானின் தற்போதைய புகைப்படம் ஒன்று அண்மையில் வெளியானது. அதில் நரைத்த தலையுடன் காணப்படும் ஜாக்கிசானின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

நரைத்த தலையுடன் காணப்படும் ஜாக்கிசானை பார்த்து, “இவருக்கும் வயதாகுமோ” என்கிற ஆச்சரியத்தோடு பகிர்ந்தனர் அவருடைய ரசிகர்கள். பின்பு, அது படத்திற்காகப் போடப்பட்ட கெட்டப் என்றும் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் ஆறுதல் படுத்தினார் ஜாக்கி. இருந்தாலும் அவருக்கு 70 வயதாகி விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

70 வயதை தொட்டுவிட்ட ஜாக்கிசானின் தற்போதைய புகைப்படம் என அண்மையில் வெளியான புகைப்படம்

இந்நிலையில், தனது 27 வயது இளமை ஜாக்கி சானை அறிமுகப்படுத்தி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் ஜாக்கி. கடந்த 2005-ம் ஆண்டு ‘தி மித்’ என்ற படத்தில் நடித்தார் ஜாக்கி. அதன் இரண்டாம் பாகம் ‘தி லெஜென்ட்’ என்ற பெயரில் இப்போது உருவாகி வருகிறது. இதற்காகதான் தனது 20 வயது ஜாக்கி சானை களம் இறக்கி இருக்கிறார்கள். இது டூப்போ அல்லது டீ ஏஜிங் தொழில்நுட்பமோ கிடையாது என்பதுதான் இன்னொரு ஆச்சரியம்.

ஏஐ தொழில்நுட்பத்தை இதற்காகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதில் இளமையான போர்வீரன் மற்றும் தற்போதைய தோற்றத்தில் ஆராய்ச்சியாளர் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் ஜாக்கி சான். ஏஐ ஜாக்கி சிறப்பாக வந்திருப்பதாகவும் ரசிகர்களுக்கும் இது பிடிக்கும் எனவும் படக்குழு உற்சாகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.