மின் நுகர்வோர் சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மின்தடை உள்ளிட்ட புகார்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் சென்னையில் அமைக்கப்படுள்ள மின்னகம் என்ற மின் நுகர்வோர் சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். திடீர் மின் தடை, மின் கம்பிகள்…

மின்தடை உள்ளிட்ட புகார்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் சென்னையில் அமைக்கப்படுள்ள மின்னகம் என்ற மின் நுகர்வோர் சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

திடீர் மின் தடை, மின் கம்பிகள் அறுந்து விழுதல், மின் கம்பங்கள் சாய்தல், மழையால் மின் தடை போன்ற மின்சாரம் தொடர்பான குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மின்னகம் என்ற நுகர்வோர் சேவை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மையத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நுகர்வோர் மையம் 24 மணி நேரமும் தடையின்றி செயல்படும்.

நுகர்வோரின் குறைகளைப் பெறுவதற்காக 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் அளிக்கும் புகார்களை பெற்று, சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள மின்விநியோக அலுவலகங்களுக்கு தெரிவித்து, குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் ஒருங்கிணைந்த முறையில் புகார்களுக்குத் தீர்வு காணப்படும்.

மின் நுகர்வோர் சேவை மையத்தை 94987 94987 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். 1912 என்ற எண்ணில் தொடர்பு கொள்வதில் குறைபாடுகள் இருப்பதால் இந்த புதிய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் நுகர்வோர் 1912 எண்ணை தொடர்பு கொண்டால், அந்த அழைப்பு புதிய எண்ணுக்கு மாற்றம் செய்யப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.