செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி தண்ணீர் திறப்பு!!

தொடர்ந்து நீர்மட்டம் உயர்வதன் எதிரொலி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 200 கன அடி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.   வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு…

தொடர்ந்து நீர்மட்டம் உயர்வதன் எதிரொலி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 200 கன அடி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு 452 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 22.29 கன அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது. அதாவது 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 3 ஆயிரத்து 195 மில்லியன் கன அடியாக உள்ளது.

இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து வினாடிக்கு 25 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் 10 மணிக்கு 200 கன அடியாக உபரிநீர் திறக்கப்படுகிறது. இதனால் குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, காவனூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குடிநீர் தேவைக்காக 105 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.