சென்னையில் தவறாக கொசு மருந்தை குடித்து இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சின்ன மாத்தூர் பெருமாள் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி மற்றும் நந்தினி தம்பதியர்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. பாலாஜி நேற்று வழக்கம் போல் காலை 6 மணிக்கு பணிக்கு சென்றுள்ளார். வீட்டில் இரண்டு குழந்தைகளும் தனியாக விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது யாரும் இல்லாத சமயத்தில் இரண்டாவது பெண் குழந்தை லட்சுமி ஸ்விட்ச் போர்டில் இருந்த கொசு மருந்து எடுத்து வாயில் வைத்துள்ளது. சிறிது நேரத்தில் குழந்தை மயங்கிய நிலையில் வாயிலிருந்து நுரை வர ஆரம்பித்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் நந்தினி குழந்தையை அழைத்துக் கொண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
நேற்று மதியம் முதல் மாலை வரை குழந்தைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை குழந்தை லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இது தொடர்பாக எம்.எம். காலனி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







