அமர்நாத் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் அமல்நாத் யாத்திரை செல்லும் வழியில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் இந்த என்கவுன்டர் நடந்தது. ஜம்முவில் சோனாமார்க்,…

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் அமல்நாத் யாத்திரை செல்லும் வழியில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் இந்த என்கவுன்டர் நடந்தது. ஜம்முவில் சோனாமார்க், பஹல்காம் ஆகிய முகாம்களிலிருந்து புறப்பட்ட அமர்நாத் யாத்ரீகர்கள் இந்த நெடுஞ்சாலையை கடந்து சென்றனர்.

என்கவுன்டர் குறித்து காஷ்மீர் காவல் துறை ஐஜி விஜய் குமார் கூறுகையில், “என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளும் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். அமர்நாத் யாத்திரை செல்லும் வழியில் இந்த என்கவுன்டர் நடைபெற்றது” என்றார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இந்த ஆண்டில் 70 என்கவுன்டர்கள் நடந்துள்ளன. அதில் மொத்தம் 122 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் 33 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இந்த பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் 16 பாதுகாப்புப் படை வீரர்களும், 19 அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்தனர். 46 பயங்கரவாதிகளை ஜம்மு-காஷ்மீர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்ததாக 192 பேரை காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து இந்த ஆண்டு கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.