நீலகிரியில் தொடர் மழை காரணமாக 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த நிலையில் மேலும் 2 தாலுகாக்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக மீட்புப் பணிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையின் இரு குழுக்கள் நீலகிரி மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை விரைந்தது.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்றின் காரணமாக இன்று 06.07.2023 ஒரு நாள் மட்டும் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் நேற்று அறிவித்தார். இந்நிலையில், குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.பி அம்ரித் அறிவித்துள்ளார்.







