மேற்கு ஆசிய நாடான குவைத்துக்கு 192 மெட்ரிக் டன்கள் மாட்டு சாணத்தை இயற்கை வேளாண்மைக்காக இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே இதுபோன்ற ஒப்பந்தம் மேற்கொண்டது இதுவே முதல் முறையாகும். குவைத்தில் இயங்கிவரும் லேமர் என்ற கழிவு மேலாண்மை நிறுவனம், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த நிறுவனத்திடம் 192 மெட்ரிக் டன்கள் மாட்டு சாணத்தை அனுப்பி வைக்குமாறு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
இதுகுறித்து இயற்கை விவசாயிகள் சங்கத்தின் தேசியத் தலைவர் அதுல் குப்தா கூறுகையில், “ஜெய்ப்பூரைச் சேர்ந்த நிறுவனம் சன்ரைஸ் அக்ரிலேண்ட் மற்றும் வளர்ச்சி ஆராய்ச்சி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் ஆர்டர் செய்தது. 2020-2021ம் நிதியாண்டில் விலங்குகள் சம்பந்தப்பட்ட ரூ.27,155.56 கோடி மதிப்பிலான தயாரிப்புகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது” என்றார்.
சன்ரைஸ் அக்ரிலேண்ட் நிறுவனத்தின் இயக்குநர் பிரசாந்த் சதுர்வேதி கூறுகையில், “இந்தியாவிலிருந்து மாட்டு சாணம் குவைத்துக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது இதுவே முதல்முறையாகும். மாட்டு சாணம் கொண்டு செல்லப்படவுள்ள கன்டெய்னர்களை சுங்கவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்யவுள்ளனர். முதல்கட்டமாக இன்று ஏற்றுமதி செய்யப்படவுள்ளது” என்றார்.
மாட்டு சாணத்தை உரமாகப் பயன்படுத்தும்போது பழங்கின் அளவு அதிகரிக்கிறது என்று குவைத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர். குவைத்தில் பருவநிலை மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பாரம்பரிய விவசாயம் சாத்தியமில்லை. எனினும், கடந்த சில ஆண்டுகளாக இயற்கை வேளாண்மையை அந்நாட்டு அரசு ஊக்குவித்து வருகிறது.
நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர்கள் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தது மிகப் பெரிய பிரச்னையாக ஆனது. அரபு நாடுகளில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், முஸ்லிம் நாடுகளில் ஒன்றான குவைத்துக்கு மாட்டு சாணம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
-மணிகண்டன்








