தமிழ்நாட்டில், 17-வது கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில், கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஓரிரு நாட்களில், தினசரி கொரோனா தொற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை, இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் இன்று 17-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 50 ஆயிரம் முகாம்களும், சென்னையில் ஆயிரத்து 600 முகாம்களும் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 25-ஆம் தேதி அன்று 12 முதல் 18 வயதுடையோர்களுக்கான கோவேக்சின் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்த அதே நாளில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 15 முதல் 18 வயதுடைய அனைவருக்கும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தப்படும் என அவர் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, ஜனவரி 3ம் தேதி போரூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 15-18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாட்டு பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
அதில், 2007 ஆம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்கள் தடுப்பூசி போட தகுதியானவர்கள் எனவும், அவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்த வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் தகுதியான மாணவர்களை கணக்கெடுக்க ஆசிரியர் ஒருவரை பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் எனவும் அதில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நியமிக்க பட்ட ஆசிரியர், பள்ளி நிர்வாகத்தையும் சுகாதாரத் துறையும் ஒருங்கிணைத்து பள்ளிகளின் வாயிலாகவே முகாம்கள் அமைத்து தடுப்பூசியை மாணவர்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கோவாக்சின் தடுப்பூசையை செலுத்திகொள்ள இன்று முதல் பதிவு செய்துக்கொள்ளலாம்.







