176வது தியாகராஜர் ஆராதனை விழா; பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடும் நிகழ்வு தொடக்கம்

176வது தியாகராஜர் ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை பாடும் நிகழ்வு இன்று தொடங்கியது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சத்குரு தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை விழா கடந்த 6ம் தேதி தொடங்கியது. இந்த விழாவை…

176வது தியாகராஜர் ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை பாடும் நிகழ்வு இன்று தொடங்கியது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சத்குரு தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை விழா கடந்த 6ம் தேதி தொடங்கியது. இந்த விழாவை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். விழாவில் தினமும் காலை 9 மணி முதல் இரவு 10.20 மணி வரை இசைக்கலைஞர்கள் பாடியும், இசைத்தும் தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பாடும் நிகழ்வு தொடங்கியது. இந்த விழாவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார். பின்னர் காலை 8.30 மணி முதல் 9 மணி வரை நாகசுரம் நிகழ்ச்சியும், தொடர்ந்து பிரபஞ்சம் எஸ்.பால சந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை தொடங்கியது. இதில் தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்ந பாடல் பாடப்பட்டது.

இதில் பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஓ.எஸ்.அருண், கடலூர் ஜனனி உள்ளிட்ட ஏராளமான இசைக்கலைஞர்கள் பங்கேற்று பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடியும், இசைத்தும் சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

இதில் பிரபல பாடகர்கள், கர்நாடக இசைக் கலைஞர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில், ஒரே ராகத்தில், தியாகராஜனின் ஐந்து கீர்த்தனைகளை பாடி அஞ்சலி செலுத்தினர். இசை கலைஞர்களின் இசை அஞ்சலியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் அமர்ந்திருந்து கண்டு ரசித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.