நடப்பாண்டில் இதுவரை நாடு முழுவதும் 17 பேர் கழிவு நீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும்போது ஏற்படும் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கும், கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கும் மனிதர்களைப் பயன்படுத்தக் கூடாது என்று தொடர்ந்து கூறப்பட்டு வந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர். இந்நிலையி, நடப்பாண்டில் இதுவரை நாடு முழுவதும் 17 பேர் கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கழிவுநீர் தொட்டி மரணங்கள் தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய சமூக நீதித் துறை அமைச்சகம், கடந்த 2017ம் ஆண்டு 92 பேரும், 2018ம் ஆண்டு 67 பேரும், 2019ம் ஆண்டு 116 பேரும். 2020ல் 19 பேரும், 2021இல் 36 பேரும் உயிரிழந்தனர். இதில், தமிழகத்தில் 2015ம் ஆண்டு 7 பேர், 2018இல் 9 பேரும், 2019ம் ஆண்டில் 13 பேரும், 2020ம் ஆண்டில் 9 பேரும், 2021இல் 5 பேரும் உயிரிழந்தனர். 2022இல் 17 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்யும்போது மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன. இத்தகைய மரணங்களைத் தடுப்பதற்காக ஏற்கனவே உரிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருப்பதாகவும், ஐயாயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட உள்ளாட்சி அமைப்புகளில் இயந்திரத்திலான கருவிகளை பயன்படுத்த தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








