16வது குடியரசு தலைவர் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக் காலம் வரும் 24ந்தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் களம் இறங்கினர்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4033 பேர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 776 பேர் என 4,809 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஒரு எம்.பி வாக்கு 700 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எம்.எல்.ஏக்கள் வாக்கின் மதிப்பு ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும்.
இந்நிலையில், குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாநில சட்டமன்றவளாகத்திலும், நாடாளுமன்ற வளாகத்திலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
நாடாளுமன்றத்தில் தேர்தல் ஆணையத்தால் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட 727 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 9 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 736 வாக்காளர்களில் 730 பேர் வாக்களித்தனர். 99.18% வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாடு, சத்தீஸ்கர், கோவா, குஜராத், இமாச்சல், கேரளா, கர்நாடக, ம.பி, மணிப்பூர், சிக்கீம் மற்றும் புதுச்சேரியில் 100% வாக்குகள் பதிவாகின. மொத்தத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் சுமார் 99% வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுனிறது. இன்று மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகளை விமானங்கள் மற்றும் சாலை மார்க்கமாக பலத்த பாதுகாப்புடன் டெல்லி கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சென்னையில் தலைமைச் செயலகத்தில் குடியரசுத்தலைவர் தேர்தல் வாக்களிப்பு முடிந்தவுடன் வாக்குப்பெட்டி சட்டமன்ற செயளாலர் சீனிவாசன் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை விமான நிலையம் கொண்டுசெல்லப்பட்டது. இதையடுத்து சென்னையில் இருந்து இரவு 8.30 மணிக்கு டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் வாக்குபெட்டியை டெல்லிக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடைபெற்றன. புதுச்சேரி மாநிலத்தில் பதிவான வாக்குகள் நாளை டெல்லி கொண்டு செல்லப்படும் எனக் கூறப்படுகிறது. குடியரசு தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 21ந்தேதி டெல்லியில் எண்ணப்படுகின்றன. அன்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தேர்ந்தெடுக்கப்படுபவர் வரும் 25ந்தேதி இந்தியாவின் குடியரசு தலைவராக பதவியேற்பார்.







