தமிழ்நாடு முழுவதும் 16 மெட்ரிக் டன் அரிசி விற்பனை – தமிழக அரசு!

தமிழ்நாடு முழுவதும் அமுதம் அங்காடி, கூட்டுறவு சங்க கடைகளில் ஒரு கிலோ ரூ.30 க்கு விற்பனை செய்யப்படும் என அறிவித்த சன்னரக அரிசி இதுவரை 16 மெட்ரிக் டன் அளவுக்கு விற்பனையாகியுள்ளது.

கர்நாடகம், ஆந்திராவில் மழை குறைவால் விளைச்சல் குறைந்து அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பொன்னி அரிசியின் வரத்து குறைந்ததாக கூறப்பட்டது. இதனால் தமிழ் நாட்டில் அரிசியின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனையடுத்து சன்னரக அரிசி கிலோவுக்கு ரூ.20 வரை உயர்ந்து, சில உயர்தர ரகங்கள் கிலோ ரூ.75 முதல் ரூ.90 வரை விற்கப்படுகின்றது.

அரிசியின் விலையுயர்வால் வெகுஜன மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு தமிழகத்தில் விளையும் 1 லட்சம் மெட்ரிக் டன் சன்னரக அரிசியை அமுதம் அங்காடி, கூட்டுறவு சங்க கடைகளில் கிலோ ரூ.30-க்கு வழங்கப்படும் என அறிவித்தது.

சென்னையில் கடந்த 17.10.2026 அன்று முதற்கட்டமாக 30 இடங்களில் தொடங்கப்பட்ட இத்திட்டம், தற்போது மாநிலம் முழுவதும் 34 மாவட்டங்களில் 184 விற்பனை நிலையங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக மொத்தம் 995 மெட்ரிக் டன் சன்னரக அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 21.10.2026 நிலவரப்படி, தமிழ்நாடு முழுவதும் 184 விற்பனை நிலையங்களில் இதுவரை 16 மெட்ரிக் டன் அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, குறைந்த விலையில் அரிசி கிடைக்கத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.