முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீர்-கிராம சபை கூட்டங்களில் விவசாயிகள் தீர்மானம்

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்கத்தை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக…

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்கத்தை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட
கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் தமிழக விவசாயிகள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளவும், பேபி அணையை  பலப்படுத்திய பின் முழு கொள்ளளவான 152 அடி தேக்கிக் கொள்ளலாம் எனவும் உச்ச நீதிமன்றம் 2014ல் தீர்ப்பு வழங்கியது. ஆனால் பேபி அணையை பலப்படுத்த கேரளா அரசு பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேலும் அணையில் நீர்மட்டம் 142 அடியாக உயரும்போது அணை குறித்த தவறான தகவல்களைப் பரப்பி பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறது. இதனிடையே இடுக்கி தொடுபுழா அருகே வெள்ளியமட்டம் ஊராட்சியில் கடந்த செப்டம்பர் 17ம் தேதி முல்லைப் பெரியாறு அணையை உடைத்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு தமிழக விவசாயிகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காந்தி ஜெயந்தி நாளில் நடந்த கிராமசபை கூட்டத்தில் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்க வேண்டும் எனவும், இடுக்கி மாவட்டம் வெள்ளிய மட்டம் ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தமிழக
விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்பத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.