டெல்லியில் காதலியை கொன்று உடலை 35 துண்டுகளாக வெட்டிய அப்தாப் பூனாவலா நீதிமன்ற காவலில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த அப்தாப் தனது காதலியுடன் டெல்லியில் தனியாக வசித்து வந்தார். அப்போது ஷ்ரோதா வாக்கரை கொடூரமாக கொலை செய்த அப்தாப், உடல் பாகங்களை 35 துண்டுகளாக வெட்டி டெல்லியில் உள்ள வனப் பகுதியில் வீசியதாக வெளியான தகவல் நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் அப்தாப்பை கைது செய்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை தங்கள் காவலில் எடுத்து கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்திய டெல்லி போலீசார் நேற்று அவரிடம் உண்மை கண்டறியும் சோதனையை நடத்தினர். இந்நிலையில் 4 நாள் போலீஸ் காவல் முடிந்து இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அப்தாப்பை 13 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அப்தாப்பிடம் வரும் 28ந்தேதி போதை மருந்து சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே அப்தாப்பும் ஷ்ரேத்தா வாக்கரும் தங்கியிருந்த பகுதியில் உள்ள சுமார் 150 சிசிடிவி காமிராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.







