முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

ஆவலுடன் எதிர்நோக்கும் 11ஆவது உலகத்தமிழ் மாநாடு


இலா. தேவா இக்னேசியஸ் சிரில்

கட்டுரையாளர்

உலகின் தொன்மையான வரலாறும், பெருமையும், இலக்கியச்செறிவும் கொண்ட செம்மொழியான தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், தமிழ் மொழிக்கு உலகளாவிய அளவில் மேலதிக ஈர்ப்பை உருவாக்குவதற்கும், அறிவியல் ஆதாரங்களுடன் தமிழர் தம் வரலாற்றை நிலைநிறுத்தும் சான்றுகள் வெளிக்கொண்டுவருவதற்குமான தளம் அமைத்து தருகிறது உலகத்தமிழ் மாநாடு.

தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்களின் முயற்சியால் டில்லியில் 1964 இல் உருவானதுதான் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம். உலகத் தமிழறிஞர்களை ஒன்றிணைத்து அவர்களது ஆராய்ச்சிகளை உலகறியச்செய்யும் வகையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்தவும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கிய போது திட்டமிடப்பட்டு, உலகத்தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது.

நடத்தப்பட்ட உலகத்தமிழ் மாநாடுகள்:

முதல் மாநாடு – கோலாலம்பூரில் 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 16 – 23 வரை நடைபெற்றது

இரண்டாம் மாநாடு – காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முதலமைச்சராக இருந்த பக்தவச்சலம் முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருந்த நிலையில், ஆட்சி மாற்றத்தினால் திமுக ஆட்சிக்கு வந்தது. முதலமைச்சராக பொறுப்பேற்ற அண்ணாவால் 1968ஆம் ஆண்டு ஜனவரி 3 முதல் 10ஆம் தேதி வரை சென்னையில் நடத்தப்பட்டது. சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற மாநாட்டில் அண்ணா ஆற்றிய உரை தயங்காதே தமிழா என்ற கட்டுரையாக வெளியிடப்பட்டது

மேலும் சென்னை மெரினா கடற்கரையில் தமிழறிஞர்களுக்கு வரிசையாக சிலைகள் வைக்கப்பட்டன. அந்த மாநாட்டில் அப்போது குடியரசுத்தலைவராக இருந்த ஜாகீர் உசேன், பிரதமராக இருந்த இந்திரா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மூன்றாம் மாநாடு – 1970ஆம் ஆண்டு, ஜனவரி 15 முதல் 18 ஆம் தேதி வரை பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடைபெற்றது

நான்காம் மாநாடு – இலங்கை யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு ஜனவரித் 3 முதல் 9ஆம் தேதி வரை நடைபெற்றது.

ஐந்தாம் மாநாடு – 1981ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் ஜனவரி 4 முதல் 10 ஆம் தேதி வரை மதுரையில் நடைபெற்றது. மதுரையில் உலகத் தமிழ்ச்சங்கம் தொடங்கவும், தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கவும் இம்மாநாடு அடித்தளமிட்டது. எம்.ஜி.ஆர் ஆற்றிய உரை அமுதத்தமிழ் வளர்ப்போம் என்ற தலைப்பில் கட்டுரையாக வெளியிடப்பட்டது.

ஆறாவது மாநாடு – மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் 1987ஆம் ஆண்டு நவம்பர்த் 15 முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் தொடக்க நிகழ்வில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி உரையாற்றினார்

ஏழாவது மாநாடு – மொரீசியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிசில் 1989ஆம் ஆண்டு டிசம்பர் 1 முதல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது

எட்டாவது மாநாடு – முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் 1995ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 5ஆம் தேதி வரை தஞ்சாவூரில் நடத்தப்பட்டது.

இன்றும் தமிழ் என்றும் தமிழ் என்ற புதிய முழக்கத்தை இந்த மாநாட்டில் அறிவித்ததுடன், வளரும் தமிழ் கட்டுரையையும் வெளியிட்டார்

ஒன்பதாவது மாநாடு – 2015 ஆம் ஆண்டு ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்றது

பத்தாவது மாநாடு – அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் 2018 ஆம் ஆண்டில் ஜூலை 5 முதல் 7 வரை நடத்தப்பட்டது.

சர்ச்சைகளும், சிக்கல்களும்:

1974ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற நான்காம் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்றவர்களை அந்நாட்டு காவல்துறை தாக்கியதில் 11 பேர் கொல்லப்பட்ட சோக நிகழ்வு ந்டைபெற்றது.

1995 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் சிவத்தம்பி உள்ளிட்ட ஈழத் தமிழறிஞர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது மிகப் பெரும் சர்ச்சையானதுடன், சென்னை விமான நிலையத்தில் இருந்தே அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

கடந்த 2010 ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கோயம்புத்தூரில் உலகத் தமிழ் மாநாடு நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் அதற்கு ஒப்புதல் அளிக்காத சூழலில் செம்மொழி மாநாடாக நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பில் 11 ஆவது மாநாடு:

உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கப்பட்ட 1964 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 27 மாநாடுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை 10 உலகத் தமிழ் மாநாடுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஒற்றுமையின்மையும், ஒருங்கிணைப்பு இல்லாமையும் முக்கியமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை 22இல் தமிழ் ஆட்சி மொழி & தமிழ்ப் பண்பாட்டு துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் தலைமைச்செயலக வளாகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. அதன் பின் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தபோது, உலகத்தமிழ் மாநாடு எப்போது நடத்தப்படும்? என நியூஸ் 7 தமிழ் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, உலகத்தமிழ் மாநாடு நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

11 ஆவது உலகத்தமிழ் மாநாட்டை எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 136 நாடுகளில் வசித்து வரும் தமிழர்கள் தமிழ் மொழிக்கு தங்களால் இயன்ற சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். அவர்களும் அடுத்த உலகத்தமிழ் மாநாட்டை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

2023இல் தமிழ்நாட்டில் மாநாடு நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னை, மதுரை, தஞ்சாவூரில் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ள நிலையில் திருச்சியில் நடத்த வேண்டும் என அவ்வூரைச்சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் பாகுபாடின்றி தனது செயல்பாடுகளை மேற்கொண்டு வருவதாக பாரட்டப்பட்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உலத் தமிழாராய்ச்சி மன்றம் மேற்கொள்ளும் மாநாட்டு பணிகளுக்கு அரசின் முழுமையான உதவிகளை வழங்குவார் என்றே எதிர்பார்க்கலாம்.

 

கட்டுரையாளர்: இலா. தேவா இக்னேசியஸ் சிரில்

Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

Halley karthi

2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒரு ரூபாய்க்கான வரவு – செலவுகள்

Jeba Arul Robinson

தமிழ்நாட்டில் தடுப்பூசிகள் கையிருப்பில் தற்போது இல்லை: சுகாதாரத்துறை செயலர்