மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே மேலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மகன் தமிழ்துரை (15). பத்தாம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்வு எழுதினார். இதற்கிடையே, கடந்த ஏப்.25ம் தேதி அப்பகுதியில் உள்ள உத்திராபதியார் கோயிலில் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி கோயிலில் மின்விளக்குகள் கட்டப்பட்டிருந்தன. தமிழ்துரை தனது நண்பர்களுடன் கோயிலில் விளையாடிக் கொண்டிருந்தார்.
இதையும் படியுங்கள் : இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம் என்ன?
அப்போது மின்விளக்கு பொருத்தப்பட்டிருந்த இரும்புக் கம்பத்தை தமிழ்துரை தொட்டபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த செம்பனார்கோவில் போலீசார், மாணவரின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராற்விற்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் உயிரிழந்த மாணவன் தமிழ்துரை 313 மதிப்பெண்கள் பெற்று பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம் குடும்பத்தினர் மத்தியிலும் அக்கம் பக்கத்திலும் பெரும் சோகத்தில் ஆழத்தியுள்ளது.








