தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றைய கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பாமக எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி பேசுகையில்,
“பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். 18,000 போக்சோ வழக்குகளில் பத்தாயிரம் வழக்குகள் வாதிடாமலே உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களை எவ்வாறு கனிவோடு கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தில் உள்ளது. இதையெல்லாம் பின்பற்றினாலே போக்சோ நீதிமன்றத்தில் பெண்களுக்கு நீதி கிடைக்கும். 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளை சமூக வலைதளங்களில் ஈடுபடாமல் இருக்க தமிழ்நாட்டில் ஒருமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். முன்னர் பாதிக்கப்பட்டவர்களின் வயது குறைவாக இருக்கும். இப்போது குற்றம் செய்பவர்களின் வயது குறைந்துள்ளது.
சிங்கப்பெண் படையை உருவாக்கியது மிக மிக நல்லது. தீபாவளி பொங்கல் போது ஒரு நாளாவது டாஸ்மாக்கிற்கு விடுமுறை கொடுங்கள். மாற்றுத்திறனாளிகளாக பணிபுரியும் அனைத்து துறை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மாற்றுத்திறனாளிகளை பார்த்துக் கொள்ளும் சிறப்பு ஆசிரியர்களுக்கு நிறைய கோரிக்கைகள் உள்ளது. அதை நிறைவேற்ற வேண்டும்.
கூட்டுறவு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தர்மபுரியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட வேண்டும். காவிரி, தர்மபுரி, உபரி நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதனை மறந்து விடாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.




