நீலகிரி மாவட்டம் கடந்த 40 நாட்களில் 10 புலிகள் உயிரிழந்துள்ளதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
உதகை அருகே உள்ள சின்ன குன்னூர் பகுதியில் 4 புலி குட்டிகள் உயிரிழந்தது வனத்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக முதுமலை புலிகள் காப்பக இயக்குநர் வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
4 புலி குட்டிகள் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இறந்த புலிகளின் மாதிரிகள் உத்தரபிரதேசம், ஹைதராபாத் மற்றும் கோவை உள்ளிட்ட நாட்டின் வெவ்வேறு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தாய்ப்பால் மற்றும் நீர் சத்து குறைவு காரணமாக புலிக்குட்டிகள் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த புலிக்குட்டிகளின் ஒரு கிலோமீட்டர் தொலைவில் மானை புலி தாக்கிக் கொன்றது வனத்துறையினரின் தேடுதல் பணியில் தெரியவந்த நிலையில் புலியின் எச்சம் மாதிரிகள் மற்றும் உயிரிழந்த புலிக்குட்டிகளின் டிஎன்ஏ மாதிரிகள் ஆய்வகத்திற்காக அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் அதே பகுதியில் கால்நடையை புலி வேட்டையாட முயன்றது. அதன் புகைப்படங்களை ஆய்வு செய்து பார்த்தபோது அப்புலி முதுமலை புலிகள் காப்பகத்தில் உட்பட்ட சீகூர் பகுதியில் நடமாடி வந்த MDT 234 பெண் புலி என தெரியவந்தது. இது இறந்த குட்டிகளின் தாயாக இருக்கலாம். அப்பகுதியில் வேறு ஏதும் புலிகள் நடமாடி வருகிறதா என வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 40 நாள்களில் 4 வயதான புலிகள், 6 குட்டிப் புலிகள் என 10 புலிகள் இறந்துள்ளன.
உதகை வனச்சரகத்தில் புலிகளின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே புலிகளின் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வருடத்திற்கு ஒருமுறை புலிகளில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்
நீலகிரி மாவட்டத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் 30 சதவீதம் வனப் பணியாளர்கள் குறைவாக உள்ளனர். காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம் என அவர் தெரிவித்தார்.







