10 சதவிகித இட ஒதுக்கீட்டால் மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள் என திமுக எம்.பி வில்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இவ்வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரவீந்திர பட், பீலா திரிவேதி, ஜே.பி.பர்திவாலா அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்தனர்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன், ”10 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் முதல் வழக்கு திமுகவுடையது. இந்த இடஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கொண்டு வரப்பட்டது அல்ல என வாதிட்டோம். 10 % இட ஒதுக்கீடு உயர் வகுப்பினருக்கு வழங்கப்படுகிறது 10 சதவிகித இடஒதுக்கீட்டால் மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.
தங்களுடைய வாதங்களை முழுமையாக எடுத்து வைத்ததாகவும், இன்றைக்கு மாறுபட்ட தீர்ப்புகள் வந்துள்ளன. 3:2 அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன என்ற அவர், “தலைமை நீதிபதி, மற்றும் ரவீந்திர பட் ஆகிய இருவரும், மற்றவர்கள் இந்த இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படுவார்கள் என கூறியுள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.







