முக்கியச் செய்திகள் தமிழகம்

10.5% இடஒதுக்கீடு: சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதில்

10.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் சமூகநீதியை நிலைநாட்ட சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடர்பாக பாமக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. அப்போது, உண்மை நிலையின் அடிப்படையில், புள்ளி விவரங்களை சேகரித்து 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சருக்கு பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி கோரிக்கை விடுத்தார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி எம்எல்ஏ வேல்முருகனும், 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வன்னியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவே 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை அதிமுக அரசு கொண்டுவந்ததாக தெரிவித்தார். மேலும், சாதிவாரியான கணக்கெடுப்பின் அடிப்படையிலும், போராட்டங்கள் அடிப்படையிலும் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

10.5 சதவீத உள்ஒதுக்கீட்டு வழக்கில், முறையான தரவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு தவறிவிட்டதாக சாடிய அவர், சரியான வாதங்களை முன்வைக்காததால்தான், 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

 

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழக்கில் தமிழ்நாடு அரசு தீவிரமாக வாதாடியதாக குறிப்பிட்டார். எழுத்துப்பூர்வமான ஆவணங்களை பதிவு செய்த தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர்களின் செயல்பாட்டை உச்சநீதிமன்றமே பாராட்டியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

2021 சட்டமன்ற தேர்தலையொட்டி 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்காக அவசரமாக கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவே உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு காரணமாக அமைந்தது என சுட்டிக்காட்டினார். எனவே, இது மாநிலத்தின் பிரச்னை என்பதால் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் சமூகநீதியை நிலைநாட்ட சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

மதுரை எய்ம்ஸ் – ரூ.1500 கோடி நிதி ஒதுக்கீடு

Arivazhagan CM

ஏலம் விடப்பட்ட தந்தையின் வாகனத்தை மீட்ட பெண்

Saravana Kumar

மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம்; நீதிமன்றம் அறிவுறுத்தல்

Halley Karthik