சேலத்தில் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்த பொதுமக்களுக்கு இலவசமாகத் தண்ணீர் பாட்டில் வழங்கிய பாஜகவினர்.
பொதுமக்களுக்கு மலிவு விலையில் சுகாதாரமான பாட்டில் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற முயற்சியில், பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பெயரில் , 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் 10 ரூபாய்க்கு வழங்கும் சேவை இன்று சேலம் அம்மாபேட்டை பகுதியில் தொடங்கியது.
இந்த 10 ரூபாய் தண்ணீர் பாட்டில் வழங்கும் முயற்சியைச் சேலம் பாஜக மாநகர மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு தொடங்கி வைத்து தண்ணீர் பாட்டிலைப் பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும் அவ்வழியாக வந்த அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளை நிறுத்தி உள்ளிருந்த பயணிகள் அனைவருக்கும் இலவசமாக மோடிஜி தண்ணீர் பாட்டில்களை பாஜகவினர் வழங்கினர்.
தொடர்ந்து சேலத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பத்து ரூபாய் தண்ணீர் கேன் விற்பனை மையங்கள் திறக்கப்படும், மேலும் தமிழகம் முழுவதும் இதே போல பத்து ரூபாய்க்கு மோடி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாஜகவினர் தெரிவித்தனர்.







