நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று 1 பில்லியன் அதாவது 100 தடுப்பூசி எண்ணிக்கையை இந்தியா கடந்துள்ளது.
காலை 7.30 மணி நிலவரப்படி 99.85 கோடி பேருக்கு நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது காலை 10.30 நிலவரப்படி 1,00,04,80,500ஐ கடந்துள்ளது. இந்த தகவலை கோவின் இணையதளம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வரை 75 சதவிகிதத்தினர் முதல் டோஸையும், 31 சதவிகிதத்தினர் இரண்டாம் டோஸையும் செலுத்தியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தகுதியுடையோர் அனைவரும் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு விநாடிக்கு 700 தடுப்பூசிகள் வீதம் செலுத்தப்படுவதாகவும் எனவே 100 கோடியின் கடைசி தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர் யாரென்று கண்டறிவது சற்று கடினம் என்றும் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.சர்மா கூறியிருந்தார்.
தற்போது வரை 70,83,88,485 பேர் ஒரு தவணை தடுப்பூசியும், 29,18,32,226 இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டுள்ளனர். இதில் 18-44 வயதிற்கு உட்பட்டோர் 46,46,62,265 பேரும், 45 வயதிற்கு மேற்பட்டோர் 30,36,43,267 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 12,21,60,335 பேரும், தமிழ்நாட்டில் 5,39,60,165 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
https://twitter.com/ANI/status/1451051452458160128
இந்தியா 100 கோடி தடுப்பூசியை கடந்ததையடுத்து உலக சுகாதார மையத்தின் தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இயக்குநர் பூனம் கெத்ரபால் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல டெல்லியில் உள்ள கொரோனா கட்டளை மையத்தில் (War Room) மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேரில் சென்று பணியாற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இனிப்புகளை பரிமாறிக்கொண்டார்.
https://twitter.com/narendramodi/status/1451051712387731458
பிரதமர் மோடி, “இந்தியா புதிய வரலாற்றை எழுதுகிறது” என்றும், இதற்காக உழைத்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்ற அனைவருக்கும் வாழ்த்துகளையும் டிவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.







