விவசாயிகளுக்கு ஆதரவாக ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை திருப்பியளிக்க முடிவெடுத்துள்ளதாக குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் விவசாயிகள் சார்பில் டெல்லி சலோ போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக மத்திய அரசு சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். வேளாண் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். வேளாண் சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை திருப்பி அளிக்கவிருப்பதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இவர் 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலமும், உலக சாம்பியன்ஷிப், காமென்வெல்த் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பல்வேறு பதக்கங்களையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







