வறுமை காரணமாக விட்டுச் சென்ற குழந்தை தாயிடம் மீண்டும் ஒப்படைப்பு; தமிழ் மகள் என பெயர் சூட்டிய எஸ்பி!

வறுமை காரணமாக காட்பாடி ரயில் நிலையத்தில் விட்டுச்சென்ற 3 மாத பெண் குழந்தை தாயிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு தமிழ் மகள் என எஸ்பி பெயர் சூட்டினர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுந்தரி…

வறுமை காரணமாக காட்பாடி ரயில் நிலையத்தில் விட்டுச்சென்ற 3 மாத பெண் குழந்தை தாயிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு தமிழ் மகள் என
எஸ்பி பெயர் சூட்டினர்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுந்தரி (63) என்பவர் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி
ரயிலுக்காக வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த போது அவரிடம் வந்த பெண், தனது 3 மாத பெண் குழந்தையை கொடுத்துவிட்டு சிறிது நேரம் பார்த்துக் கொள்ளும்படியும், கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் குழந்தையை கொடுத்த பெண் வராததால் பதற்றம் அடைந்த சுந்தரி காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள இரும்பு பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதனை அடுத்து காவல்துறையினர் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, அதில் நடைமேடையை வலம் வந்த பெண், 3 மாத பெண் குழந்தையை மூதாட்டி சுந்தரியிடம் ஒப்படைத்துவிட்டு வெளியில் காத்துக் கொண்டிருந்த கணவர் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வேக வேகமாக ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார்.

இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து காட்பாடி இருப்பு பாதை காவலர்கள்
விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு போலீசார் சமூக வலைதளங்கள் மூலமாக குறிப்பாக வாட்ஸ்அப் மூலமாக குழந்தையின் புகைப்படத்தையும் தாயின் புகைப்படத்தையும் பதிவிட்டு தேட ஆரம்பித்தனர். இந்நிலையில் ராணுவ அதிகாரி ஒருவர் மூலமாக வேலூர் மோதக்கல் கிராமத்தில்
இருக்கும் குழந்தையின் தாயை போலீசார் கண்டுபிடித்தனர்.

விசாரணை செய்ததில் கலைச்செல்வி என்பவருக்கு பிறந்த நான்காவது பெண் குழந்தை
என்பது தெரிய வந்துள்ளது. குடும்ப வறுமை காரணமாக பெண் குழந்தையை வளர்க்க முடியாமல் ரயில்வே நிலையத்தில் மூதாட்டி இடம் விட்டுச் சென்றதாகவும் தெரிவித்தார்.

இதனை எடுத்து ரயில்வே இருப்பு பாதை போலீசார் குழந்தையின் பெற்றோரை
எச்சரித்ததோடு மட்டுமல்லாது குழந்தைகள் நல குழு அதிகாரிகள் மூலமாக
கலைச்செல்வியின் குழந்தைகள் வளர்வதற்கும் படிப்புக்குமான உதவியை செய்வதற்கும்
ஏற்பாடு செய்தனர்.

24 மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று மாத குழந்தையை ரயில்வே இருப்புப்
பாதை எஸ்பி பொன்ராம் மற்றும் தனிப்படை போலீசார் தாயிடம் ஒப்படைத்தனர். அப்போதுபெயர் வைக்கப்படாத அந்த மூன்று மாத குழந்தைக்கு தமிழ் மகள் என எஸ்பி பொன்ராம் பெயர் சூட்டினார்.

இதுபோன்று குழந்தைகளை விட்டுச் செல்லும் பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் எனவும், இது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.