சென்னையில் அடுத்தாண்டு தண்ணீர் பஞ்சம் ஏற்படாத வகையில் ஏரிகளில் தண்ணீர் இருப்பு உள்ளது என நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகர மக்களின் ஒரு நாள் குடிநீர் தேவை 1200 எம்.எல்.டி. ஆனால், கடந்த மாதம் வரை 800 எம்.எல்.டி தான் வழங்க முடிகிறது. தற்போது மக்களின் தண்ணீர் தேவை ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அடுத்தாண்டு தண்ணீர் பஞ்சம் ஏற்படாத வகையில் ஏரிகளில் தண்ணீர் இருப்பு உள்ளது என தெரிவித்தார்.
மேலும், சென்னையை சுற்றி மாநகராட்சிக்கு சொந்தமான 200 ஏரிகள் உள்ளன. அவற்றை தூர்வாரி மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அம்மா உணவகத்தில் யாரையும் பணியில் இருந்து நீக்கவில்லை. சமீபத்தில் சப்பாத்தி நிறுத்தப்பட்டதாக எழுந்த புகார்கள் உடனடியாக சரி செய்யப்பட்டது. அதற்கான காரணத்தையும் தமிழ்நாடு அரசு வெளிப்படையாக அறிவித்தது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.







