ராஜஸ்தானில் அடுத்த ஒரு மாதத்திற்கு 13 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து, அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தினமும் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். டிசம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். அனைத்து நிறுவனங்கள் மற்றும் கடைகளும் 7 மணிக்குள் மூடப்பட வேண்டும். அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது.
அதேபோல் இரவு ஊரடங்கு நேரத்தில் சரக்கு லாரிகள் இயங்குவதற்கு தடை கிடையாது. ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்ததால் மக்கள் மிகவும் அச்சமடைந்தனர். இந்நிலையில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் அசோக் கெலாட், 13 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ராஜஸ்தானில் கொரோனாவை கண்டறியும் RT-PCR பரிசோதனைக்கான விலையும் குறைக்கப்பட்டுள்ளது. தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான கட்டணம் ரூ.1,200ல் இருந்து ரூ.800 ஆக குறைக்கப்பட்டுள்ளது.







