ரஜினி கட்சியோடு கூட்டணி அமையுமானால், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை பேசி முடிவெடுப்போம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல், சீரமைப்போம் தமிழகத்தை என்ற முழக்கத்துடன் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தின் நான்காவது நாளான இன்று, நெல்லையில், இளைஞர்கள் மற்றும் பெண்களை சந்தித்து தலை நிமிரட்டும் தமிழகம் என்ற தலைப்பில் கலந்துரையாடினார்.
அரசியலை மதவாதத்தில் இருந்து விடுவிக்க உருவானது தான் ஜனநாயகம் என்றும், வழிபாட்டு தலங்களை முன்வைத்து சண்டையிடுவது தேவையற்றது என்றும் தெரிவித்துள்ளார். ஆட்சியாளர்கள் மக்களுக்கு சேவகர்களாக இருக்க வேண்டும் என்றும், மக்களின் அன்பு மட்டும்தான் எங்களை ஆளும் என்றும் கூறியுள்ளார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் தனது தலைமையில் மூன்றாவது அணி கட்டாயம் அமையும் என குறிப்பிட்டார். நல்லவர்களோடு இணைந்து மூன்றாவது அணி அமைப்போம் என கூறிய கமல், ரஜினியோடு கூட்டணி அமையுமானால், இருவரில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பேசி முடிவெடுப்போம் என்றும் தெரிவித்தார்.







