அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி மெக்கன்சி ஸ்காட் கடந்த 4 மாதங்களில் 4 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.29,400 கோடி) நன்கொடையாக அளித்துள்ளார்.
உலகின் 18வது பணக்காரரான அவர் தனது சமீபத்திய நன்கொடைகள் தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு 60.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. அமேசான் நிறுவனத்தில் உள்ள அவரது பங்குகளின் மூலம் சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் அவர் கடந்த 4 மாதங்களில் இந்திய மதிப்பில் ரூ.29,400 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த ஜூலை மாதத்தில் 1.7 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.12,500 கோடி) நன்கொடை வழங்கியதாக தகவல் வெளியானது. கொரோனா காலத்தில் ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில், மெக்கன்சி ஏராளமானோருக்கு உதவி செய்துள்ளார்.
இந்த ஆண்டு வழங்கப்பட்ட நன்கொடைகளில் இதுதான் அதிகம் என்று கூறப்படுகிறது. மெக்கன்சி ஸ்காட் கல்வி, ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டுக்காக நிறைய தொகையை செலவிட்டுள்ளார்.







