முதலமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி ஜூலை 3ம் தேதி திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இதுவரை 75,811 மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் 1,07,299 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 22-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 2,99,558 பேர் பதிவு செய்த நிலையில் 2,44,104 மாணவர்கள் விண்ணப்பங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, கட்டணமும் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலைக் கல்லூரிகளில் மொத்தம் 1,07,299 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன, இதற்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 75,811 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீதமுள்ள இடங்களுக்கு இன சுழற்சி முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
ஜுன் 30, 2023 வரை முதலாமாண்டு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும். முதலாமாண்டு மாணவர்களுக்கு ஜூலை 3 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளது.








