சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மின்சார வாரியத்தை தனியார்மயமாக்க எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவித்தார்.
ஆனாலும் கூட தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டினார். அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் போராட்டங்கள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மின் ஊழியர் சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 30,000 பணியாளர்களை தனியார் மூலம் நியமிக்கும் உத்தரவு வாபஸ் பெறப்படுவதாகவும் தெரிவித்தார். தொழிற்சங்க நிர்வாகிகள் வழக்கை வாபஸ் பெற்றால் உடனே 10,000 பேருக்கு பணி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘அதானிக்கு நாங்கள் பயிற்சி கொடுத்து கொண்டிருப்பதாக வாட்ஸப்பில் தகவல் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரே ஒரு நபர் மட்டும் சோலார் பயிற்சி எடுத்து வருகிறார். கட்டணம் செலுத்தி யார் வேண்டுமானாலும் பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்’ என விளக்கமளித்துள்ளார்.







