மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கண்துடைப்பு நாடகம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஅரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் குற்றம்சாட்டியுள்ளார்.
நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகை பெண்களின் முன்னேற்றத்திற்கு நிச்சயம் உதவியாக இருக்கும். இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் சனாதனம் குறித்து பேசுவது அந்தந்த கட்சியின் உரிமை. மகளிர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறுவது கடினம்.
மத்தியில் 9 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது. அப்போது எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பல மசோதாக்கள் கூட நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் விரைவில் வர உள்ளது. அதற்காக 33 சதவீத இட ஒதுக்கீடு என்ற நாடகத்தை பாஜக தொடங்கியுள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது பாஜகவின் அரசியல் தந்திரமாகும். இது அரசியல் சாசனத்திற்கு எதிரான ஒன்று. வரும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என அவர் கூறினார்.







