பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கும் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதற்கட்டமாக கடந்த மாதம் 16ம் தேதி முன்களப்பணியாளர்கள், முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் இன்று தொடங்கியது. 2-ம் தவணை தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் 615 மையங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இந்த பணியை, மருத்துவமனை தலைவர் தேரனி ராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் இரண்டாம் தவணை தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார். தடுப்பூசி போடும் பணிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் முதல் தவணயாக 2 லட்சத்து 27 ஆயிரம் முன்களப் பணியாளர்கள், 989 காவலர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறினார். அதிகபட்சமாக சென்னையில் 30 ஆயிரத்து 345 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்களுக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என தெரிவித்தார்.







