கன்னியாகுமரியில் M.A மாணவர் ஒருவர் பேருந்து நிலையத்திலேயே அமர்ந்து ஆன்லைன் தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை அடுத்த விழுந்தயம்பலம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான அரிசந்திரன்,தங்கம்மாள் தம்பதியரின் இளைய மகன் ரமேஷ். 29 வயதான இவர் தமிழ் மொழி மீது கொண்ட பற்றால் பி.ஏ., தமிழ் பட்ட படிப்பில் சேர தனது பெற்றோர் மற்றும் சகோதரிகளிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால் யாரும் அவர் படிக்க உதவி செய்ய முன் வராத நிலையில் தனது நண்பர்களின் உதவி மற்றும் சிறு, சிறு வேலைகள் செய்து சேமித்து வைத்திருந்த பணம் மூலம் நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் சேர்ந்து பி.ஏ தமிழ் படிப்பை முடித்துள்ளார்.
தொடர்ந்து எம்.ஏ தமிழ் படிக்க போதிய பொருளாதார வசதி இல்லாத நிலையில் மீண்டும் கூலி வேலைக்கே சென்றுள்ளார். அதன்பிறகு தான் சேமித்த பணத்தை வைத்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அதே கல்லூரியில் எம்.ஏ தமிழ் மேற்படிப்பிற்கு சேர்ந்து படிப்பை தொடர்ந்துள்ளார். இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் முதலாமாண்டு எம்.ஏ முதல் செமஸ்டரில் கவிதை மற்றும் நாடகம் என்ற பாட பிரிவில் தோல்வி அடைந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது அரியர் தேர்வை ஆன்லைனில் எழுதலாம் என கல்லூரிகள் அறிவித்து அதற்கான தேதியை வெளியிட்டது. ஆன்லைன் தேர்வு இன்று நடைபெறும் நிலையில் அதற்கான ஸ்மார்ட்போன் மற்றும் இணைய வசதிகள் தன் கையில் இல்லாத நிலையில் தனது நண்பர் ஒருவரை தேடிக் கண்டுபிடித்து அவர் மூலமாக கேள்வி தாள்களை பதிவிறக்கம் செய்துள்ளார். மேலும் தக்கலை பேருந்து நிலைய நடைபாதையிலேயே அமர்ந்து நண்பரின் செல்போன் உதவியுடன் பரபரப்பாக ஆன்லைன் தேர்வை எழுதினார். இதை கண்ட பொதுமக்கள் அவரை வியப்போடு பார்த்து சென்றனர். தமிழில் டாக்டரேட் பட்டம் பெறுவதே நோக்கம் எனவும் மாணவர் கூறியுள்ளார்.







