தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் ஓசூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேகதாது பகுதியில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓசூரில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் தேமுதிகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னதாக ட்ராக்டரில் ஊர்வலமாக வந்த பிரேமலதா, பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது கர்நாடக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் பேசிய பிரேமலதா, தமிழ்நாடு ஏற்கனவே வறண்ட பூமியாக உள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனம் ஆகும். தஞ்சைக்கு நீர் வரவில்லை என்றால் விவசாயம் கேள்விக்குறியாகும் என தெரிவித்தார். இந்நிலையில், நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் ஓசூர் போலீசார், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவரது மகன் விஜய பிரபாகரன் உட்பட 349 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.







