ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு விருந்துக்காக அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழில் பாரத் குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது முதல் புதிய பாஸ்போர்ட் வேண்டுமா என சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் உள்ள ஜி 20 மாநாடு பிரகதி மைதானத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.இந்த மாநாட்டில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசு தலைவர் விருந்தளிக்கிறார். அதற்காக அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கு பல்வேறு தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். ஜி20 உச்சி மாநாட்டின் போது ராஷ்டிரபதி பவனில் நடைபெறவுள்ள இரவு விருந்துக்கான அழைப்பிதழில் ‘தி பிரசிடெண்ட் ஆஃப் பாரத் என்று எழுதப்பட்டிருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான தருணம்”என்று உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் தற்போது முதல் புதிய பாஸ்போர்ட் வேண்டுமா என சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். சில கட்சிகளின் கூட்டணி இந்தியாவாக மாறினால், அவர்கள் நாட்டின் பெயரை மாற்றுவார்களா? நாடு 140 கோடி மக்களுக்கு சொந்தமானது, ஒரு கட்சிக்கு அல்ல.
இந்தியா கூட்டணி பாரத் என்று பெயர் மாற்றினால், பாரதத்தை பாஜக என்று பெயர் மாற்றுவார்களா?… இது என்ன நகைச்சுவை?… தங்கள் வாக்கு எண்ணிக்கை குறையும் என்று பாஜக நினைக்கிறது, எனவே பெயரை மாற்ற வேண்டும்” என கூறுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.







