பாகிஸ்தான் கடனில் தவிப்பதற்கு இம்ரான் கானே காரணம்: ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தானுக்கு 4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் இருப்பதாக தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இதற்கு முந்தைய இம்ரான் கான் அரசே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் பிரதமராக பதவி…

பாகிஸ்தானுக்கு 4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் இருப்பதாக தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இதற்கு முந்தைய இம்ரான் கான் அரசே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நாட்டு மக்களுக்கு ஷெபாஸ் ஷெரீப் உரையாற்றினார். அப்போது, பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீது லிட்டருக்கு ரூ. 30 உயர்த்தப்பட்டது குறித்து பேசினார்.

வேறு வழியின்றியே இந்த உயர்வு அமல்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். நாட்டிற்கு மிகப் பெரிய கடனை வைத்ததோடு, பன்னாட்டு நாணய நிதியத்துடன் பாதகமான உடன்படிக்கையையும் இம்ரான் கான் அரசு மேற்கொண்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். உண்மைகளை அப்பட்டமாக புறந்தள்ளிவிட்டு இம்ரான் கான் அரசு செயல்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

எரிபொருட்கள் மீதான விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அதை சரிகட்ட வரும் நிதிநிலை அறிக்கையில், அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.2,000 வழங்குவதற்கு ஏற்ப ரூ.7,211 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் நேற்று முன்தினம் முதல் பெட்ரோல் விலை ரூ.179.86-க்கும், டீசல் ரூ.174.15க்கும், மண்ணெண்ணெய் விலை ரூ.155.56க்கும் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.