காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் ஆலய சனீஸ்வர பகவான் சனி பெயர்ச்சி விழா இன்று நடைபெற்றது. விழாவின் காரணமாக காரைக்கால் மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது மேலும் 1500க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் காலை 4 மணியளவில் தொடங்கிய இந்த சனிப்பெயர்ச்சி விழாவையடுத்து, சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன அதைத்தொடர்ந்து சரியாக 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசித்தார், இந்த நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கோயிக்கு வந்திருந்தனர்.
கொரோனா பரவல் காரணமாகவும் பல்வேறு கட்டுப்பாடுகளால் பக்தர்கள் கூட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது. மேலும் இந்த விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். சனிப்பெயர்ச்சி விழாவில் சனி பகவானை தரிசனம் செய்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, பல தடைகளையும் எதிர்த்து இறைவன் அருளால் இந்த சனிப்பெயர்ச்சி விழா நல்லபடியாக நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும் திருநள்ளாறு சனிபெயர்ச்சியை தடுக்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எடுத்த அனைத்து முயற்சிகளும் இறைவன் அருளால் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், நமக்கு சாதகமாக தீர்ப்பு அளித்துள்ள நீதி அரசர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். மேலும் இது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி என கூறிய அவர் அதிகாரத்தில் இருப்பவர்கள் மதத்தினுடைய செயல்பாடுகளில் தலையிடக் கூடாது எனவும் தெரிவித்தார்.







