பட்டா மாறுதல் செய்ய லஞ்சம் பெற்ற ஆர்.எஸ். மங்கலம் வட்டாட்சியர் தென்னரசுவை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்து அவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
காரைக்குடி, அமராவதிபுதூர் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் சம்மந்தமாக கடந்த 21ம் தேதி ஆர்எஸ் மங்கலம் வட்டாட்சியர் தென்னரசுவைச் சந்தித்துள்ளார்.
அப்போது வட்டாட்சியர் பட்டா மாறுதலுக்காக ரூ.3 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார். முதற்கட்டமாக ரூ.1 லட்சம் கேட்ட நிலையில், கருப்பையா ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரனை சந்தித்து புகார் தெரிவித்தார்.
அவர்கள் கொடுத்த அறிவுரையின்படி ரசாயனம் தடவிய ரூ.1 லட்சத்தை நேற்று வட்டாட்சியர் தென்னரசுவிடம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
மேலும் அவரது பையில் இருந்து கணக்கில் வராத ரூ.50 ஆயிரத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரெ. வீரம்மாதேவி







