கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள சஞ்சீப் பானர்ஜியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ. பி சாஹியின் பதவிகாலம் வரும் 31ம் தேதியோடு முடிவடைய உள்ளது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே தலைமையிலான கொலிஜியம் தற்போது கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள சஞ்சீப் பானர்ஜியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளது.
உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் இந்த பரிந்துரை மத்திய சட்ட அமைச்சகத்தால் ஏற்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பின் சஞ்சீப் பானர்ஜி சென்னை உயர்நீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1961ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி பிறந்த சஞ்சீப் பானர்ஜி, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்த பின் 1990ல் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். கொல்கத்தா, டெல்லி, ஜார்கண்ட், அலகாபாத், மும்பை உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக தொழில் செய்த அவர், சிவில், நிறுவன சட்டங்கள், சமரச தீர்வு, அரசியலமைப்பு சட்டம் ஆகியவற்றில் பிரசித்தி பெற்றவராக திகழ்ந்தார்.
2006ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், தற்போது கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ளார். அதே போல, சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள வினித் கோத்தாரியை குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யவும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.







