தமிழ்நாட்டு விடுதலை வீரர்களை நாடு முழுவதும் அறிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம்

தமிழ்நாட்டு விடுதலை போராட்ட வீரர்களை இந்தியா முழுக்க அறிய செய்ய மாநில அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி, கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். இந்திய விடுதலை போரில் வெள்ளையர்களை எதிர்த்து போர்…

தமிழ்நாட்டு விடுதலை போராட்ட வீரர்களை இந்தியா முழுக்க அறிய செய்ய மாநில அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி, கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

இந்திய விடுதலை போரில் வெள்ளையர்களை எதிர்த்து போர் புரிந்த மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் வெள்ளையர்களால் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர். அவர்களின் வீரத்தை போற்றும் விதமாக அவர்களுக்கு திருப்பத்தூரில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்பட்டு சிலை நிறுவப்பட்டுள்ளது. தூக்கிலிடப்பட்ட இடத்தில் நினைவு தூணும் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 24 ஆம் தேதி அரசு சார்பில் நினைவஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு 220 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களது நினைவிடத்தில் ஆட்சியர் மதூசூதன் ரெட்டி மற்றும் எஸ்.பி செந்தில்குமார் பங்கேற்றனர். ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றினார். அவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து மருது பாண்டியர்களின் வாரிசுதாரர்கள் சார்பில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சிவகங்கை எம்.பி, கார்த்தி சிதம்பரம் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறும்போது, மருது சகோதரர்களின் தியாகம் இந்தியா முழுவதும் தெரிய வேண்டும். ஆனால் இந்தியாவில் சரித்திர புத்தகங்களில் தென்னகத்தை அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்களை பற்றி சரித்திரத்தில் இருக்காது. முழுக்க முழுக்க வடமாநிலங்களை சேர்ந்தவர்களே விடுதலை போரை முன்னெடுத்ததுபோல் இடம்பெற்றிருக்கும்.

மத்திய அரசு பாட புத்தகங்களில் ஜான்சி ராணிக்கு அளிக்கும் முக்கியத்துவம் வேலுநாச்சியாருக்கு இல்லை. இந்திய விடுதலை போரில் தமிழக விடுதலை போராட்ட வீரர்களின் பங்கு அதிகம். தமிழ்நாட்டு விடுதலை போராட்ட வீரர்களை இந்தியா முழுக்க அறிய செய்ய மாநில அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.