தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் இருப்பதாக தெரிவித்தார். இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து ராமநாதபுரம் வழியாக நகர்ந்து தெற்கு கேரள பகுதியை நோக்கி நகரும் என கூறியுள்ளார். இதன் காரணமாக கடலூர், நாகை, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும் எனக்கூறினார்.







