“ஜனவரி 18ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்கள் 100% செயல்படும்” – சென்னை உயர்நீதிமன்றம்

கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களை ஜனவரி 18ம் தேதி முதல் முழு அளவில் செயல்பட அனுமதிப்பது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக…

கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களை ஜனவரி 18ம் தேதி முதல் முழு அளவில் செயல்பட அனுமதிப்பது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டு, காணொலி காட்சி மூலம், அவசர வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. தொற்று பரவல் குறைந்து வந்ததையடுத்து, கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணைக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக் குழு கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களையும் ஜனவரி 18ம் தேதி முதல் முழு அளவில் செயல்பட அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேவைப்பட்டால் காணொலி காட்சி விசாரணையை அனுமதிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் முழு அளவில் செயல்பட துவங்கியுள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி முழு அளவில் கீழமை நீதிமன்றங்களை அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதிகள், தங்கள் கருத்துக்களை, டிசம்பர் 23ம் தேதிக்குள் தெரிவிக்கும்படி சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply