கிழக்கு லடாக்கில் சீனப் படையினர் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக, வெளியான தகவல் தவறானது, என இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த செய்தி உறுதி செய்யப்படாமல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அது முற்றிலும் தவறானது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் சீனா உடனான ஒப்பந்தங்கள் செயலற்று போய்விட்டதாக கூறப்படும் தகவல் தவறானது, ஆதாரமற்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரியில் நடைபெற்ற ஒப்பந்தத்திற்கு பின்னர், எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிக்க இருதரப்பினரும் எந்தவித முயற்சியிலும் ஈடுபடவில்லை என தெரிவத்துள்ளனர். மேலும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது போல், கல்வானிலோ வேறு எந்த பகுதியிலோ மோதல்கள் எதும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவும் சீனாவும் சிக்கல்களை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தன என்றும், அந்தந்த பகுதிகளில் வழக்கமான ரோந்து பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எல்லையில் நிலைமை சீராக உள்ளதாகவும், தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.







