11 மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற தேர்தலில் சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றியது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 16 மாவட்ட கவுன்சிலர்களுக்கான பதவியிடங்களில் 8 இடங்களை அதிமுகவும், 6 இடங்களை திமுகவும், காங்கிரஸ் 2 இடங்களையும் கைப்பற்றின. இதனை தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, அதிமுக, திமுக சமபலத்தில் இருந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், தொடர்ச்சியாக பெரும்பான்மை நிரூபிக்கப்படாமலும், அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்காமல் இருந்ததாலும், கொரோனா காரணமாகவும் 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 11 மாதங்கள் கழித்து தேர்தல் நடைபெற்றது.
இதில், மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தலில் இரண்டு அணிகளுக்கும் சமமாக வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், குலுக்கல் முறை கையாளப்பட்டது. மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு அதிமுகவை சேர்ந்த பொன்மணி பாஸ்கரும், துணைத்தலைவர் பதவிக்கு அதிமுகவை சேர்ந்த சரஸ்வதியும் தேர்வு செய்யப்பட்டனர்.







