சதுரங்கவேட்டை பட பாணியில் தொழிலதிபர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய கும்பல் ஒன்று லட்சக்கணக்கில் பணம் பறித்தது அம்பலமாகியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழையை பூர்வீகமாகக் கொண்ட கே.எம்.ஜோசப் சென்னை கீழ்ப்பாக்கத்தில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்துவருகிறார். இவர் சென்னையில் மெத்தைகள், தலையணைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறார். ஜோசப்பிடம் முகநூல் மூலம் எலிசபெத் ஆப்ரஹாம் என்ற பெண் பழகியுள்ளார். தான் லண்டனை சேர்ந்தவர் என்றும் மருத்துவ குணங்கள் வாய்ந்த பொருட்களை வியாபாரம் செய்வதற்கு உதவுமாறும் ஜோசப்பிடம் கேட்டுள்ளார்.
மேலும் இந்த தொழிலில் நிறைய சம்பாதிக்கலாம் என அவர் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். புற்றுநோய் உள்ளிட்டவற்றிற்கு மருந்து தயாரிக்க போலிக் ஆசிட் தேவை எனவும் அந்தப் பொருள் மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தில் கிடைப்பதாகவும் தெரிவித்த அவர், நிறுவனத்தின் தொடர்பு எண்ணையும் ஜோசப்பிடம் வழங்கியுள்ளார். இதனை நம்பிய ஜோசப், முதற்கட்ட மாதிரிக்காக 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து 2 லிட்டர் போலிக் ஆசிட் வாங்கியுள்ளார். தனக்கு 20 லிட்டர் போலிக் ஆசிட் வேண்டும் என கூறியதால், சுமார் 41 லட்சம் ரூபாயை மும்பை நிறுவனம் கூறிய வங்கி கணக்கில் செலுத்தியதாக தெரிகிறது. இதன்பின், மொத்த கும்பலும் தொடர்புகளை துண்டித்து விட்டன. இதனால், ஜோசப்புக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தான் ஏமாற்றப்பட்டது குறித்து ஜோசப் தனது வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விசாரித்தபோது, அந்த நிறுவனம் உள்பட அனைத்தும் போலியானது என தெரியவந்தது. இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் ஜோசப் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், இதேகும்பல் வெவ்வேறு தொழிலதிபர்களை குறிவைத்து ஏமாற்றியதை கண்டுபிடித்தனர். ஜோசப் பணம் செலுத்திய வங்கி கணக்குகளை ஆய்வு செய்தபோது, போலி அடையாள அட்டைகள் மூலமாக அந்த வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து விசாரணையை முடுக்கிவிட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார், இந்த மோசடியின் பின்னணியில் நைஜீரிய கும்பல் ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த கும்பலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.







