கோவை ரியல் எஸ்டேட் பெண் அதிபரிடம் ரூ.2.5 கோடி பணம், 100 சவரன் நகை கொள்ளை: 40 நாட்களுக்குப் பின் 3 பேர் கைது!

கோவை ரியல் எஸ்டேட் பெண் தொழிலதிபருக்கு மயக்க மருந்து கொடுத்து 100 சவரன் தங்க நகை மற்றும் ரூ.2.50 கோடி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற 3 பேரை 40 நாட்களுக்குப் பின் போலீசார் கைதுசெய்தனர்.…

கோவை ரியல் எஸ்டேட் பெண் தொழிலதிபருக்கு மயக்க மருந்து கொடுத்து 100 சவரன் தங்க நகை மற்றும் ரூ.2.50 கோடி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற 3 பேரை 40 நாட்களுக்குப் பின் போலீசார் கைதுசெய்தனர்.

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதி கிருஷ்ணா காலனியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி வயது 60. அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி என்பவர் ரியல் எஸ்டேட் சம்பந்தமாக அவருடன் அறிமுகமாகி பின்னர் இருவரும் தொழில் செய்து வந்துள்ளனர். இருவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்ட நிலையில், வர்ஷினி தனக்கு தெரிந்த இடைத்தரகர்கள் மூவரை ராஜேஷ்வரிக்கு அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி ராஜேஸ்வரி வீட்டிற்கு வந்த வர்ஷினி உள்ளிட்டோர் இரவு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் வீட்டில் இருந்த ரூ.2.5 கோடி பணம் மற்றும் 100 சவரன் நகை ஆகியவற்றை அவர்கள் கொள்ளையடித்து விட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. காலையில் பீரோவை திறந்து பார்த்த ராஜேஷ்வரி நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து, கோவை இராமநாதபுரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் விசாரணை அடிப்படையில் இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த அருண்குமார், சுரேந்திரன்,பிரவீன் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் திருவள்ளூர் மாவட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 33 லட்ச ரூபாய் பணம் மற்றும் 31 சவரன் நகை மீட்டுள்ளனர்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய வர்ஷினி மற்றும் நவீன்குமார் ஆகியோரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.