நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் அமைந்துள்ள கெரடா மட்டம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கெரடா மட்டம் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பகுதியாகும். இப்பகுதியில் கரடி, காட்டெருமை, மான், சிறுத்தை, புலி மற்றும் அவ்வப்போது யானைகளின் நடமாட்டமும் காணப்படும். சமீபகாலமாக கெரடா மட்டம் பகுதியில் பகல் நேரங்களில் சிறுத்தையின் நடமாட்டம் காணப்பட்டது. அதோடு கடந்த சில நாட்களாக கிராமப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள தேயிலைத் தோட்டம் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் சிறுத்தையின் நடமாட்டம் காணப்படுவதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்பவர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் தேயிலை தோட்டங்களின் அருகே சிறுத்தைகள் உலா வருவது குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு அவற்றின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். அதே நேரத்தில் தேயிலை தோட்டத்திற்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்களும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு செல்வோரும் பாதுகாப்பு கருதி கவனத்துடன் இருக்க வேண்டுமென கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.







