குற்றால அருவிகளில் இரண்டு நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் வந்து நீராடிச் செல்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்ட குற்றால அருவிகளில் கடந்த 15ம் தேதி முதல் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 2 நாட்களாக மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீர்வரத்து இன்று குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் மீண்டும் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பின்பே சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.







